தமிழகம்

22 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று: சிறுங்குன்றம் தனியார் தொழிற்சாலை மூடல்

செய்திப்பிரிவு

சிறுங்குன்றம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் 22 தொழிலாளர்களுக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதால், வருவாய்த் துறையினர் தற்காலிகமாக அந்தத் தொழிற்சாலையை நேற்று மூடினர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் சிறுங்குன்றம் கிராமத்தில் மின்சாதன உபபொருட்களைத் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றுஇயங்குகிறது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். மேற்கண்ட தொழிற்சாலை தமிழக அரசின் ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றாமல், முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 22 தொழிலாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோரை நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டியிருந்ததால், சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் தொழிலாளர்களின் உறவினர்கள் ஆம்புலன்ஸை முற்றுகையிட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீஸார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேரையும் செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி தலைமையிலான வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று தேவையான தடுப்புநடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும், அந்த தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடிவிசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், அத்தொழிற்சாலை மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்போரூர் வட்டாட்சியர் தெரிவித்தார். தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT