திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கவில்லை. காலபோக்கில் சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 கரோனா பரிசோதனை மையங்களை அரசு அமைத்து கொடுத்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு 0.6 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது. இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் தான் இந்த நிலையை அடைய முடிந்தது.
சின்னத்திரை படப்பிடிப்புகள் 60 பேருடன் நடத்தலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதே போல், 70 பேருடன் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டும் என என்னிடம் திரைத்துறையினர் வலியுறுத்தினர்.
இதனை நான் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். மேலும், இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரையும் அழைத்துச் சென்று முதல்வரை சந்தித்தேன். முதல்வர் அவர்களின் கோரிக்கைகள் கேட்டு, உரிய விதிமுறைகளை ஆராய்ந்து அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் கூறவில்லை. ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளை திறப்பதற்கு சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திரையரங்குகளை திறப்பது குறித்து காலப்போக்கில் அமைகின்ற சூழ்நிலையை பொறுத்து தான் முடிவெடுக்கப்படும்.
மேலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக உள்ள நிலங்களை சமன் செய்து, விளை நிலங்களாக மாற்றும் பணிகளை அரசே மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு 550 ஹெக்டேர் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றப்பட உள்ளது. இந்த திட்டம் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால், 800 ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கு அனுமதி வழங்க முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும்" என்றார் அவர்.