தமிழகம்

வியாபாரிகள் 6 பேருக்கு கரோனா: விருதுநகர் பாவாலி சாலை உழவர் சந்தை தற்காலிகமாக மூடல்

இ.மணிகண்டன்

விருதுநகரில் வியாபாரிகள் 6 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உழவர் சந்தை தற்காலிகமாக இன்று மூடப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று 18 சிறுவர்கள் உள்பட 307 பேருக்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை கரோனா வைரஸ் தொற்றால் 52 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அதோடு, விருதுநகர் பாவாலி சாலையில் இயங்கி வந்த உழவர் சந்தையில் காய்கறி வியாபாரிகள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து, உழவர் சந்தை தற்காலிகமாக இன்று மூடப்பட்டது. அதோடு, உழவர் சந்தைக்கு வந்து சென்ற பொதுமக்கள் தானாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவிப்பும் செய்யப்பட்டது.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 9,100ஐ கடந்தது. 6,041 பேர் சிகிச்சை முடிந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

சுமார் 3 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கரோனை வைரஸ் தாக்கத்தால் இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்குவதால் பொதுமக்களும், நோயாளிகளும் அச்சமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT