செட்டிப்பட்டு கிராமத்தில் சேதமடைந்த வாழை மரங்களைச் சோகத்துடன் பார்க்கும் விவசாயிகள். 
தமிழகம்

புதுச்சேரியில் சூறாவளியால் 50 ஏக்கருக்கு மேல் வாழை மரங்கள் சேதம்; கடுமையான உழைப்பு வீணானதாக விவசாயிகள் கவலை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி கிராமப் பகுதிகளில் சூறாவளியால் 50 ஏக்கருக்கு மேல் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுச்சேரி அடுத்த திருக்கனூர், செல்லிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, திருபுவனை உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். கரோனா காலத்தில் வேலையாட்கள் அதிக அளவு வரமுடியாத சூழலிலும் தங்கள் வாழ்வைத் தக்கவைக்க விவசாயிகள் கடுமையாக உழைத்தனர்.

அறுவடைக்குத் தயாரான வாழையை இவ்வாரம் விற்க, பலரும் திட்டமிட்டிருந்தனர். இச்சூழலில், நேற்று (ஆக.2) புதுச்சேரியில் கடுமையான சூறாவளி வீசியது. மழைப்பொழிவும் இருந்தது. இதனால் கடும் சூறாவளியில் சிக்கி அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் சரிந்தன. அவற்றை முற்றிலும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், சுமார் 50 ஏக்கருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "கரோனா காலத்திலும் விவசாயத்தை நம்பி கடுமையாக உழைத்தோம். நல்ல விளைச்சல் இருந்தது. அறுவடைக்கு நாள் குறித்துவிட்டு நிச்சயம் விற்க முடியும் என்ற நம்பிக்கையை சூறைக்காற்று குலைத்துள்ளது. பாதிப்பு குறித்து உடனடியாக வேளாண்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

செட்டிப்பட்டில் வாழை பயிரிட்டு உழைத்த சுப்பராயன் கூறுகையில், "ரசாயன உரமின்றி இயற்கை முறையில் வாழையை விளைவிப்போம். இம்முறை வேலையாட்கள் கிடைக்காததால், நானும், எனது மனைவியும்தான் வேலை செய்தோம். கற்பூரவள்ளி அதிக அளவில் சேதமடைந்துள்ளது. மொத்தமாக எனக்கு மட்டும் ரூ.1.5 லட்சம் நஷ்டமாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை" என்கிறார், கண்ணீருடன்.

SCROLL FOR NEXT