தனக்கு கரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், இதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாள் பாஜக தலைவர்களில் பெரும்பாலானோரைக் கரோனா தாக்கிய நாளாக அமைந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச தொழிற்கல்வி அமைச்சர் கமல் ராணி வருண் (62) கரோனா தொற்றால் உயிரிழந்தார். அம்மாநிலத்தின் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கரோனா தொற்று நேற்று உறுதியானது.
நேற்றிரவு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் நிலையிலும் இந்தியாவில் உ.பி., கர்நாடகா, ஆந்திரா, பிஹார், ஹரியாணா, அஸ்ஸாம்,மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாகத் தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் முக்கிய விஐபிக்களான அமைச்சர்கள் முதல் ஆளுநர் வரை பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது. வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்த கரோனா தென் மாவட்டங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், பாஜகவில் இணைந்து தற்போது மாநில துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் கந்தசஷ்டி கவசத்தை உடன் எடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரனின் ட்விட்டர் பதிவு:
“அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கரோனா அறிகுறிகள் இருப்பதுபோல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் , என் சுற்றத்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தைக் கையோடு எடுத்துச் செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை”.
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை!!
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.