சென்னையில் கடந்த மாதம் மட்டும் தலைமறைவாக இருந்த 32 ரவுடிகளை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்யவும் சென்னைபெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர தேடுதல்வேட்டையில் கடந்த மாதம் மட்டும்தலைமறைவாக இருந்த 32 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அரும்பாக்கம், பாஞ்சாலியம்மன் கோயில் அருகில் நடந்து சென்ற நபரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்து தப்பிய ரவுடியான அரும்பாக்கம், ராணி அண்ணா நகரைச் சேர்ந்த ராதா என்ற ராதாகிருஷ்ணனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இவர் மீது 7 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் என சுமார் 35 வழக்குகள் உள்ள நிலையில், 6 முறை குண்டர் தடுப்புக் காவல்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். மேலும், இவர் பல வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், கூலிப்படையை வைத்து, நில புரோக்கர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.