கொடைரோடு அருகே சி.புதூர் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் ரோஜா செடிகள். (உள்படம்) வெள்ளைச்சாமி. 
தமிழகம்

ஊரடங்கு காரணமாக தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சி; திண்டுக்கல் பன்னீர் ரோஜா கிலோ ரூ.5-க்கு விற்பனை: பறிப்பு கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் பன்னீர் ரோஜா பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பூக்களைப் பறித்து வரப்பில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விற்பனை செய்வதற்காக கொடைரோடில் தனியாக மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து மதுரை, விருதுநகர், சென்னை ஆகிய இடங்களுக்கு பன்னீர் ரோஜாக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பன்னீர் ரோஜாக்கள் சாதாரண நாட்களில் கிலோ ரூ.50 முதல் ரூ.80வரை கிடைக்கும். விசேஷ நாட்கள்,கோயில் திருவிழாக்களின்போது ரூ.150 வரை விற்பனையாகும்.

கரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக கோயில்கள் திறக்கப்படவில்லை. எனவே பன்னீர்ரோஜாக்களின் தேவை குறைந்துவிட்டது.

இதுகுறித்து பன்னீர்ரோஜா பயிரிட்டுள்ள பி.புதூரைச் சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி கூறியதாவது: தோட்டக்கலைத் துறைஊக்குவிப்பின் பேரில் கொடைரோடு பகுதியில் அதிக அளவில் பன்னீர் ரோஜா சாகுபடி நடைபெறுகிறது.

நிவாரணம் வழங்க வேண்டும்

ஊரடங்கால் பூக்கள் விற்பனையும், விலையும் குறைந்துவிட்டது. தற்போது ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. பூக்களைப் பறிப்பதற்கான கூலித் தொகை, மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கான பணம் கூட கிடைக்கவில்லை.

பூக்களைப் பறிக்காமல் விட்டால் செடி பாதிக்கப்படும். எனவே,பூக்களை பறித்து வரப்பில் கொட்டஉள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தோட்டக்கலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT