வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்டு 4 ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கும், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்டு 4 ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்கள் விவரம்:
பள்ளிப்பட்டு ( திருவள்ளூர்) திருத்தணி (திருவள்ளூர்) தலா 7 செ.மீ.,
சின்னகல்லார் (கோவை), நீலகிரி தலா 6 செ.மீ.,
தேவலா (நீலகிரி), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) தலா 5 செ.மீ.,
வால்பாறை (கோவை) சோளிங்கர் (ராணிப்பேட்டை) சோலையார் எஸ்டேட் (நீலகிரி) சேறுமுல்லை (நீலகிரி) தலா 4 செ.மீ.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஆகஸ்ட் 2 முதல் 6-ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3 முதல் 6-ம் தேதி வரை கடலோர கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 3 முதல் 6-ம் தேதி வரை மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 5 மற்றும் 6-ம் தேதிகளில் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 2 முதல் 6-ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் அலை முன் அறிவிப்பு:
தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 மீட்டர் முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.