திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படையில் 173-வது படைப் பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த 27-ம் தேதி எதிர்பாராதவிதமாக அவரது துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 31-ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்திஅறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்த திருமூர்த்தியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹவில்தார் திருமூர்த்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழக அரசின்சார்பில் மரியாதை செலுத்தவும் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் மாவட்டஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரின் ஹத்துவா மாவட்டத்தில் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் சீரிய பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் எஸ்.திருமூர்த்தி வீரமரணம் அடைந்தார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்துக்கு ஆளானேன். தனது 21-வது வயதில் எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்து, தற்போது ஹவில்தாராக தியாக உணர்வுடன் பணியாற்றிய அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொண்டு, திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிதியுதவியும் வழங்குமாறு முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.