ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாதி ரீதியாக, செயல்பட்டு வருகிறார் என கருணாஸ் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
திருவாடானை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ் ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (வீ.வருண்குமார்) சாதி ரீதியாக செயல்பட்டு வருகிறார். காவல்துறையிலும் அதிகாரிகள், காவலர்கள் மீதும் சாதி ரீதியில் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
கண்காணிப்பாளரின் தந்தை ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர், அப்படி இருக்கையில் அவரது மகனை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ராமநாதபுரத்தில் எப்படி நியமித்தார்கள் என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.
அதனால் இதுதொடர்பாக நாளை திங்கட்கிழமை முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து எழுத்துபூர்வ புகார் அளிக்கவுள்ளேன்.
இஐஏ உள்ளிட்ட எந்தச் சட்டமாக இருந்தாலும் மத்திய அரசு தமிழகத்திற்கு முரணான நிலைப்பாடு எடுக்கும்பட்சத்தில் அதை நான் ஆதரிக்கமாட்டேன்.
ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனது திருவாடானை தொகுதியில் தொற்றைக் குறைப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினேன்.
போலீஸார் கடலோரப் பகுதிகளில் கஞ்சா கைப்பற்றி வழக்கை தொடர்கின்றனர். இதில் கைப்பற்றப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை வெளிப்படையாக முழுமையாக கணக்கு காண்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் மீனவ கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதையும் முதல்வரிடம் எடுத்துச் சொல்வேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸாரால் அதிக பொய் வழக்குகள் போடப்படுகின்றன. பொய் வழக்குகளால் சாத்தான்குளம் போன்ற சம்பவம் இங்கும் நடந்து விடக்கூடாது. அப்படி நடந்தால் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும்
அதனால் பொய் வழக்கு போடுவதை போலீஸார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.