ஆர்.எஸ்.ராஜன் 
தமிழகம்

பொது இடங்களில்  உள்ள சிலைகளை அப்புறப்படுத்துக; முதல்வருக்குக் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் கடிதம்

என்.சுவாமிநாதன்

தமிழகத்தில் முக்கியத் தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுவரும் நிலையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தமிழகம் முழுவதிலும் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களுக்குத் தலைவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்கலாம் எனத் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜன், ''சிலைகள் என்றாலே வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவை. கோயில்களில் இருக்கும் சிலைகள் பயபக்தியுடன் வணங்கக்கூடியவை. ஆனால், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அந்த மனநிலையில் பார்த்துவிட முடியாது. காரணம், ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு வகையிலான சிந்தாந்தம் இருக்கிறது.

அண்மைக்காலமாக சிலைகளை அவமதிக்கும் தொடர் சம்பவங்களால் தமிழகம் பரபரப்பாகி வருகிறது. பொது இடங்களில் புதிதாகச் சிலைகளை வைக்கத் தடை இருந்தபோதும் ஏற்கெனவே உள்ள சிலைகளை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பல இடங்களில் அரசும் சம்பந்தப்பட்ட சிலைகளை வைத்த அமைப்புகளும் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளைச் சுற்றிலும் இரும்புத் தடுப்பு அமைத்து பாதுகாத்து வருகின்றன.

அப்படி இருந்தும் சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படாமல் இருக்க, சிலைகள் அமைந்திருக்கும் பகுதியில் காவலர்களைக் காவலுக்கு நிறுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. சமீபகாலமாக சித்தாந்த மோதல்கள்கூட சிலைகளின் மீதான மோதலாகத் திரும்பியிருக்கும் நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு முடிவுகட்டும் வகையில் தமிழகம் முழுவதும் இருக்கும் தலைவர்களின் சிலைகளை, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் அரசே அகற்ற வேண்டும். அப்படி அகற்றப்படும் சிலைகளை அந்தச் சிலையுடன் தொடர்புடைய அமைப்புகள், கட்சிகளுக்குச் சொந்தமான இடங்களில் வைத்துப் பராமரிக்கச் சொல்லலாம்.

இனிவரும் காலங்களில் சிலை அரசியலை முற்றாகத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களுக்கு, தலைவர்களின் பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு உரிய மரியாதையைச் செய்யலாம். நடைமுறைப்படுத்த சிரமமான காரியம்தான் என்றாலும் சிலைகளை முன்னிறுத்தி நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமானால் இதுபற்றி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன்'' என்றார்.

SCROLL FOR NEXT