கோவில்பட்டியில் நகராட்சி சார்பில் நடந்த கரோனா பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். 
தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்

எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலைய வளாத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும், கரோனா தடுப்பு பணிகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அறிவுரைகளை வழங்கினார். இதில், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, நகராட்சி ஆணையர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 71 ஆயிரம் மாதிரிகள் நேற்று வரை பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதில், 7,107 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதில், 5 ஆயிரத்துக்கும் மேல் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இது 0.6 சதவீதம் சதவீதம். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா இறப்பு என்பது குறைவாகவே உள்ளது.

மாவட்டத்தில் தற்போது காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒருவருக்கு இருமல், காய்ச்சல் என கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த பகுதியில் முகாம் ஏற்பாடு செய்து, அப்பகுதியை சுற்றியுள்ள அனைவருக்கும் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இதில், முதியோர், வேறு நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காணொலி ஆய்வு கூட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்டடத்தில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நேற்று 2,300 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இது படிப்படியாக அதிகரிக்கப்படும். தனியார் ஆய்வகத்துடன் இணைந்து 3 ஆயிரம் மாதிரிகள் வரை பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

மாவட்டத்தில் ஏற்கெனவே, 8 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டர்கள் தயாராக இருக்கின்றன. 300 படுக்கைகளுடன் 3 கல்லூரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 100 படுக்கைகள் அதிகரித்து தற்போது 700 படுக்கைகள் உள்ளன. அரசு மருத்துவமனையை கோவிட் கேர் சென்டராக மாற்றி 400 படுக்கைகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1,400 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மாவட்டத்தில் 45 கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளன. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர், விட்மின் ‘சி’ சத்து மாத்திரைகள் மற்றும் அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் 65 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதனால் வரும் வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சந்தைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம். அதனை அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.

SCROLL FOR NEXT