கரோனா ஊரடங்கால் தொழில் முடங்கி அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மாறியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் சுற்றுலாபயணிகளை நம்பியே உள்ளது. சிறுகடைகள் வைத்திருப்போர் முதல் பெரிய விடுதிகள் நடத்துபவர்கள், அதில் பணியாற்றுபவர்கள் என கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை அனைவரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியே இருந்துவந்த நிலையில் தற்போது ஆகஸ்டிலும் தடை நீட்டிப்பு தொடரும் என்ற அறிவிப்பு, கடந்த நான்கு மாதங்களாக வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்துவந்தவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. .
ஆண்டுதோறும் கோடைசீசன் காலத்தில் கணிசமான வருமானத்தை ஈட்டும் மக்கள், இதைக்கொண்டு மற்ற மாதங்களின் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய நிலை உள்ளது.
ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை சிறப்பாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு கோடை சீசன் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. கடந்த 5 மாதங்களாக சுற்றுலாபயணிகள் வருகை முற்றிலும் இல்லை. இதனால், கடந்த 5 மாதங்களாகவே முற்றிலும் வருமானம் இன்றி கொடைக்கானல் மக்கள் தவித்துவருகின்றனர்.
கொடைக்கானலில் வேலைவாய்ப்புக்கள் தரும் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. இதனால் மாற்றுத்தொழிலுக்கு செல்லும் நிலையும் இங்கு இல்லை.
முதல் இரண்டு மாதங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என உதவிகள் கிடைத்துவந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்கள் எந்தவித வருமானமும் இன்றி தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் செல்ல மேலும் தடைவிதித்துள்ளதை அறிந்து கொடைக்கானல் மக்கள் மேலும் ஒரு மாதத்தை எந்தவித வருமானமும் இல்லாமல் எப்படிக் கடத்துவது என விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதுகுறித்து கொடைக்கானலைச் சேர்ந்த அப்பாஸ் கூறும்போது "கடந்த ஐந்து மாதங்களாக எந்தவித வருமானமும் இன்றி கொடைக்கானல் மக்கள் மிகவும் சிரமத்துடன் நாட்களைக் கடத்தினர்.
தற்போது ஆகஸ்ட் மாதமும் சுற்றுலா பயணிகளுக்கு தடை என்பது கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைப்பது போல் உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க பணம் இல்லாமல் பெரும்பாலோனோர் தவித்துவருகின்றனர். வறுமையின் பிடியில் மக்கள் சென்றுவிட்டனர்.
அப்பாஸ்
வாகன உரிமையாளர்கள், கடைகள் நடத்துபவர்கள் தங்கள் வழக்கமானபணி பாதிக்கப்பட்டதால் கூலிவேலைக்கு செல்ல முயன்றாலும் வேலைகள் கிடைப்பதில்லை. சுற்றுலா தடை தொடரும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சுற்றுலாத்தலங்களில் உள்ளவர்களுக்கு சிறப்பு நிவாரணம் அரசு அறிவித்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும்.
கரோனாவை கட்டுப்படுத்துவதில் உள்ள அக்கறையுடன் மக்களின் வறுமையை போக்கவும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
கொடைக்கானல் மக்களுக்கு சிறப்பு நிவாரணமாக சுற்றுலாவை வாழ்வாதாரமாக நம்பியுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும். இல்லையென்றால் கரோனாவில் இருந்து மீண்டாலும், கொடைக்கானல் மக்கள் வறுமையில் இருந்து மீள்வது கடினம்" என்றார்.