‘‘பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா மாறுதல் திட்டத்தைக் கண்டித்து ஆக.3-ல் மவுன போராட்டம் நடத்தப்படும்,’’ என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கா.செல்வன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: பதிவுத்துறையில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாற்றும் முறையை அரசு செயல்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உண்டாகும் என்பதை அறிந்தும், இந்த திட்டத்தை செயல்படுத்தியது வியப்பையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
ஏற்கெனவே இதுகுறித்து அரசிடம் தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல், விஏஓ-களில் அதிகாரத்தையும், பொறுப்பையும் பறித்து வேறு துறைக்கு கொடுக்கும் விதமாக உள்ளது.
இதையடுத்து இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி முதற்கட்டமாக ஆக.3-ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மவுனப் போராட்டம் செய்ய உள்ளளோம்.
உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்களில் இனி வருங்காலங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழுகோப்புகள் தயார் செய்யலாம் எனவும், அதற்காக விஏஓ-க்கு நில அளவை பயிற்சி (புத்தாக்கம்) அளிக்கப்படும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனை விரைவில் செயல்படுத்துவதோடு, உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்கள் விஏஓ-களுக்கு வந்து செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றி இறந்த விஏஓகளுக்கு அரசாணைப்படி, ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
நகராட்சி, மாநகராட்சி நகர கணக்குகளை விஏஓ-களிடம் நில அளவைத்துறையினர் இதுவரை ஒப்படைக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது. இந்த கணக்கு இல்லாததால் நகர பகுதிகளில் விஏஓக்கள் பணியாற்ற முடியவில்லை.
நிலவரி வசூலிக்க முடியவில்லை. இதனால் நகர கணக்குகளை விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.