சேலம்: தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு கார் ஓட்டி ஓய்வு பெற்ற ஓட்டுநர் வாழப்பாடி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அணைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (67). இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்கு பின்னர் அணைமேட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற குமாரசாமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் செய்தனர். இந்நிலையில், அவர் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார்.
தகவல் அறிந்த போலீஸார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குமாரசாமி டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தபோது, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்கு கார் ஓட்டியுள்ளார். அவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.