பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு, தன்னைப் போல் பாதிக்கப்பட்ட 12 பெற்றோர்களுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு கிடைக்க செய்துள்ளார் மதுரை பொம்மன்பட்டி மீனாட்சி.
மதுரை மாவட்டம், வாடிப் பட்டியை அடுத்துள்ள குக்கிராமம் பொம்மன்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தினகரன்(28). இவரது மனைவி மீனாட்சி(22). இவர்களுக்கு 2012-ல் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மீனாட்சி பிரசவத் துக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 14.6.2013ல் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவ ருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் திருடப்பட்டது. அவரது குழந்தையை பெண் ஒருவர் திருடிச் செல்வது மருத்துவமனை கேமராவில் பதிவாகியும், அந்த பதிவு தெளிவாக இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து குழந்தையை கண்டுபிடிக்கக் கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மீனாட்சி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டு முதல் 42 குழந்தைகள் திருடுபோனது. தெரியவந்தது. இதில் 29 குழந்தைகள் கண்டு பிடிக்கப் பட்டதும், குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் 9 வழக்குகள் முடிக்கப்பட்டதும், மீனாட்சியின் குழந்தை உட்பட 4 குழந்தைகள் மாயமான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் உள்துறை செயலர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பின்னர், அரசு மருத்துவ மனைகளில் திருடப்பட்டு 7 ஆண்டு களுக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத 6 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சமும், மனுதாரரின் குழந்தை உட்பட 7 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என செப். 22-ல் டிஜிபிக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவிட்டார்.
மீனாட்சிக்கு தற்போது 2-வதாக ஆண் குழந்தை உள்ளது. இருப்பினும் முதல் குழந்தையின் நினைவுகள் இன்னும் அவரை விட்டு அகலவில்லை. அவரை பொம்மன்பட்டி ஓலைக்குடிசையில் சந்தித்தோம். அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:
முதலாவதாக பிறந்த ஆண் குழந்தை திருடப்பட்டது தெரிந்த தும் உலகமே இருண்டு போய் விட்டதுபோல் ஆனது. 6 மாதம் வரை அதாவது 2-வது கர்ப்பம் தரிக்கும் வரை மனநலம் சரியில்லா மல் இருந்தேன். 2-வது கர்ப்பம் தரித்ததும் ஆறுதல் அடைந்தேன். இப்போது இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் என் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால், இதில் பெரிய நபர்களுக்கு தொடர்பு இருக்குமோ என நினைக்கிறேன். எனக்கு நிவாரணம் பெரிதல்ல. திருடப்பட்ட என் குழந்தையை கண்டுபிடித்து என் கண் முன் கொண்டுவந்து நிறுத்தினாலே போதும் என்றார் மீனாட்சி.