தற்போதைய சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்யவோ, தமிழை வழக்காடு மொழியாக்கவோ இயலாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மாநில மொழியான தமிழை உயர் நீதிமன்ற அலுவல், வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என்று 2019 டிசம்பர் 4-ம் தேதி மாநிலங்களவையில் தாங்கள் கோரிக்கை வைத்தீர்கள். பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் உயர் நீதிமன்றங்கள் 1862-ம் ஆண்டு காப்புரிமை பட்டயச் சட்டப்படி தோற்றுவிக்கப்பட்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றங்கள். விடுதலைக்குப் பிறகும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 225-ன்படி தொடர்ந்து அதே பெயரில் இயங்குகின்றன. இவற்றை மாநிலங்களின் பெயரிலேயே மாற்றுமாறு மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தமிழக அரசுகள் விடுத்த பரிந்துரையை ஏற்று, பெயர் திருத்தம் தொடர்பான சட்ட முன்வரைவு, மக்களவையில் 2016 ஜூலை 19-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இதே கோரிக்கையுடன் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு 2016 ஆகஸ்ட் 1-ல் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், பாரம்பரியமான இப்பெயர்களை மாற்றுவது சரியாக இருக்காது என கல்கத்தா உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல தரப்புகளில் கருத்து வேறுபாடு எழுந்ததால் இது குறித்து மீண்டும் கலந்துபேச முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் 16-வது மக்களவையின் காலம் முடிவுக்கு வந்ததால், சட்ட முன்வரைவும் செயலிழந்துவிட்டது. நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே உயர் நீதிமன்றத்தின் பெயர்களை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதேபோல, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக்குவது குறித்து கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக 1965-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, உயர் நீதிமன்றங்களில் இந்தி அல்லது மாநில மொழிகளை அலுவல், வழக்காடு மொழியாக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இக்கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி 2016 ஜனவரி 18-ல் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.