நாகூர் கந்தூரி விழாவுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக 20 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா நிர்வாகக் குழு நிர்வாகி கே.அலாவுதீனிடம் முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். 
தமிழகம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு தமிழக அரசு சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகள் முதல்வர் பழனிசாமி வழங்கினார்

செய்திப்பிரிவு

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா நிர்வாகக் குழு நிர்வாகி கே.அலாவுதீனிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவுக்கு இலவச சந்தனக் கட்டைகள் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு அறிவித்தார்.

அதன்படி 2013-ம் ஆண்டு முதல்நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு ஆண்டுதோறும் இலவச சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள கந்தூரி திருவிழாவுக்கு தமிழக அரசின் சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், தலைமைச் செயலர் கே.சண்முகம், வனத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பெ.துரைராசு, நாகூர் தர்கா நிர்வாக குழு நிர்வாகி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.எப்.அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT