தமிழகம்

பூட்டை உடைத்து கடையில் திருட்டு; மாநகராட்சி ஊழியரைப்போல உடையணிந்து வந்து துணிகரம்: இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை

செய்திப்பிரிவு

மாநகராட்சி ஊழியர்போல் உடை அணிந்து கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

முகப்பேர் கிழக்கு, நக்கீரன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (50). இவர் அதே பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம், அங்கிருந்த விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் பெருந்துறை முருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர். முதல் கட்டமாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், மாநகராட்சி ஊழியர்கள் அணியும் உடை அணிந்து வந்த 2பேர் கைவரிசையில் ஈடுபட்டு தப்பிச்செல்வது தெரிந்தது. இதையடுத்து கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள யாரேனும் திருட்டில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர்.

இந்நிலையில், திருட்டு தொடர்பாக முகப்பேரைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மாநகராட்சி ஊழியர்போல் உடை அணிந்து கைவரிசை காட்டியுள்ளார். அவரது கூட்டாளியை தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT