தமிழகம்

கரோனாவால் 6 மாதங்களாக முடங்கிய மானிய விலை சிமென்ட் திட்டம்: வீடு கட்டுமான பணிகள் பாதிப்பு

இ.ஜெகநாதன்

தமிழகம் முழுவதும் கரோனா ஊரடங்கில் இருந்து 6 மாதங்களாக மானிய விலை சிமென்ட் விநியோகம் இல்லாததால் வீடு கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

சிமென்ட் விலை உயர்வால் ஏழை மக்கள் வீடு கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மானிய விலையில் சிமென்ட் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தில் வீடு கட்ட மற்றும் பராமரிக்க சிமென்ட் மூடைகள் வழங்கப்படும்.

ஒரு மூடை சிமென்ட் ரூ.190-க்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும் சதுர அடிக்கு ஏற்ப சிமென்ட் மூடைகள் வழங்கப்படும். கடந்த காலங்களில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். தற்போது ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும். இந்நிலையில் கரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக மானிய விலை சிமென்ட் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதனால் வீடு கட்டுமானப் பணிகள் முடங்கின. சிலர் கூடுதல் விலைக்கு சிமென்ட் மூடைகளை வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கட்டுமான செலவு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கரேனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிமென்ட் மூடைகள் வரவில்லை. சிமென்ட் வந்ததும் விநியோகிக்கப்படும்,’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT