அதிகரிக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான படுக்கை வசதி புதுச்சேரியில் இல்லை என, ஆளும் காங்கிரஸ் அரசு மீது கூட்டணிக் கட்சியான திமுக குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி ஆளும் காங்கிரஸைக் கூட்டணிக் கட்சியான திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அண்மைக் காலங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக திமுக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. இச்சூழலில், கரோனா காலத்தில் புதுச்சேரி அரசின் செயல்பாடு தொடர்பாக சட்டப்பேரவையிலும் திமுக விமர்சித்தது.
இந்நிலையில், நடவடிக்கை ஏதும் எடுக்காததால், திமுக தெற்கு மாநில அமைப்பாளரும் எம்எல்ஏவுமான சிவா இன்று (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கை:
"சித்த மருத்துவத்தால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் சித்த மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். ஆனால், இதுவும் பிற அறிவிப்புகளைப் போலவே அறிவிப்பாகவே உள்ளது.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. 400 படுக்கை வசதிகள் கொண்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் கூடுதலாக நோயாளிகள் குவிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன? அங்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே ஏற்கிறதா? உள்ளிட்ட விவரங்களைச் சுகாதாரத்துறை வெளியிட வேண்டும்.
அதேபோல், தேவையான ஆம்புலன்ஸ் வசதியோ, ஓட்டுநரோ இல்லை. இதனால் நோயாளிகள் காலதாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதால் உருவாகும் மருத்துவக் கழிவுகள் கரோனா மருத்துவமனையிலேயே தீயிட்டுக் கொளுத்திதான் அழிக்கப்படுகிறது. இதனால் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, மருத்துவக் கழிவுகளை சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும்.
கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ள மின்தகன மேடையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் சடலங்களை எரிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையிலேயே இறந்தவர்களின் சடலங்களை எரிக்கக்கூடிய வகையில் மின்தகன மேடையை உடனடியாக அமைக்க வேண்டும்".
இவ்வாறு சிவா தெரிவித்துள்ளார்.