கொடைக்கானலில் தொடர் சாரல் மழை பெய்துவரும் நிலையில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடக்கமாக தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்துவருகிறது.
இந்நிலையில் நேற்று காலை முதல் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழைபெய்தது.
சிறிது நேரம் கன மழையும் பெய்தது. இதையடுத்து கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையில் வாழைகிரி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்டவரிசையில் காத்திருந்தன.
தகவலறிந்த வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே விழுந்துகிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த வாகனங்கள் தொடர்ந்து பயணித்தன.
ஊரடங்கு காலத்திலும் கொடைக்கானலுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றுவந்தவண்ணம் உள்ளது.
உள்ளூர் மக்கள் தினமும் அதிகளவில் மலைப்பகுதியில் இருந்து வத்தலகுண்டு சென்றுவர வாய்ப்பில்லாதநிலையில், மலைச்சாலையில் வாகனபோக்குவரத்து அதிகரித்துள்ளது குறித்து ஆய்வு செய்யவேண்டும் என கொடைக்கானல் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையக கொடைக்கானல் பகுதி மக்கள், அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும்நிலையில், வாகனபோக்குவரத்து அதிகரித்திருப்பது மலைப்பகுதியில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரமுடியுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.