தொகுதி மறு சீரமைப்பில் இழந்த குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதியை மறு சீரமைப்பு செய்து திரும்பப் பெற வேண்டும் என்று மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க கருத்துக்கேட்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது;
''தொகுதி மறு சீரமைப்பின்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை நாம் இழந்துவிட்டோம்.
அந்தத் தொகுதி மீட்டெடுக்கப்பட்டால் புதிதாக உருவாகும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போதுள்ள மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மேலும் ஒரு உறுப்பினர் கிடைக்கப் பெறுவார்.
4 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டமாக மயிலாடுதுறை இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் தேவைகளை விரைந்து குரல் எழுப்பிட ஏதுவாக அமையும். ஆகவே, இழந்த குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டு உருவாக்கித் தர வேண்டும்''.
இவ்வாறு ஜெகவீரபாண்டியன் பேசினார்.