தமிழகம்

டெல்டாவை பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது: அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

செய்திப்பிரிவு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டாபகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தண்ணீர் பிரச்சினை இல்லாததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்படுகிறது. இதன் மூலம் 4 லட்சத்து 61ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மழையில் நனைந்தாலும்

நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தாலும் அல்லது கொள்முதல் செய்யப்படுவதற்கு முன்னரே மழையில் நனைந்தாலும் உடனடியாக அந்த நெல்லை கொள்முதல் செய்து, அரவைக்கு அனுப்பி விவசாயிகளுக்கும் அரசுக்கும் எவ்வித நஷ்டமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ‘சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020’ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “காவிரி டெல்டா விவசாயிகள் விரும்பாத எந்தத் திட்டத்தையும், காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த முடியாது. இதற்காகத்தான் முதல்வர் பழனிசாமி, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக காவிரி டெல்டாவை அறிவித்துள்ளார். எனவே, விளைநிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது” என்று கூறினார்.

SCROLL FOR NEXT