கரோனா விழிப்புணர்வு, காய்ச்சல் முகாம்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளால் சென்னையில் கரோனா பரவல் குறைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகளை அளிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
மருத்துவ நிபுணர் குழு சார்பில் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதாரநிறுவன தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், சென்னை தேசிய தொற்றுநோய் நிறுவன துணை இயக்குநர் பிரப்தீப் கவுர், உலக சுகாதார நிறுவன மண்டல குழு முதுநிலை தலைவர் கே.என்.அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து தங்கள் கருத்துகளை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
சென்னையில் கரோனா வைரஸ்பரவல் அதிகரித்து வந்த நிலையில்,அதை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் குழு பல ஆலோசனைகளை வழங்கியது. அதை ஏற்றுஅரசு எடுத்த சரியான நடவடிக்கைகளால் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னையில் 25,532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் பரிசோதனை செய்யப்பட்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வீடு வீடாக சென்று அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
காய்ச்சல் முகாம் நடத்தியதால் சென்னையில் மட்டும் 14 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் சென்னையில் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 1,196 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் கரோனா தொற்று உள்ள இடங்களில் வசிப்பவர்களை பரிசோதித்து, அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நோய்ப் பரவல் குறைகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இறப்பு சதவீதம் 1.6, சென்னையில் மட்டும் 2.1 என நாட்டிலேயே இறப்பு சதவீதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சென்னையில் படிப்படியாக தொற்று பரவல் குறைந்துள்ளது. பிற மாவட்டங்களிலும் படிப்படியாக தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது. மருத்துவநிபுணர்கள் கூறும் ஆலோசனையின்படி அரசு செயல்படும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.