தமிழக காவல்துறைக்கு தேசியகுழந்தைகள் உரிமை பாதுகாப்புஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு:
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. இதை உடனே தடுக்கும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 15 வழக்குகளில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு ஏடிஜிபி சீமா அகர்வால் ஆகியோரை ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதில்சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.
அதன்படி, இந்த 15 வழக்குகளில் எடுத்த நடவடிக்கை குறித்தமுழு அறிக்கையை ஆணையத்திடம் தமிழக காவல் துறை சமர்ப்பித்துள்ளது. உரிய நேரத்தில் துரித நடவடிக்கை எடுத்துள்ள தமிழக காவல் துறைக்கும், இவ்விவகாரத்தில் முழுமையாக கவனம் செலுத்தி உரிய வழிகாட்டுதல் வழங்கிய டிஜிபி ஜே.கே.திரிபாதிக்கும் ஆணையத்தின் சார்பில் ஆர்.ஜி.ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.