கரோனா பேரிடர் காலத்தில் தினமும் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு நாள் அடிப்படையில் கூட மொத்தமாக முட்டைகளை விநியோகிக்க வேண்டும். தேவைப்படும் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்களை வழங்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கத் திட்டம் வகுக்கக்கோரியும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஆர்.சுதா பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “சத்துணவுக் கூடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம், குழந்தைகள், வளரிளம் பெண் குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசி, பருப்பு, சத்துமாவு, முட்டை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர். இதன் மூலம் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் 33 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும், சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவ மாணவியருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், ''கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு அரசு ஆசிரியர்கள் பணியின்றி வீட்டில் இருக்கும் இந்தச் சூழலில், அவர்கள் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது?'' எனக் கேள்வி எழுப்பினர்.
தினமும் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒரு நாள் அடிப்படையில் கூட மொத்தமாக முட்டைகளை விநியோகிக்க வேண்டும், தேவைப்படும் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்களை வழங்க வேண்டும் என நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினர்.
இவற்றை வழங்குவது குறித்த திட்டமிடலைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.