தமிழகத்தில் கால்நடை சந்தைகள் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் செம்மறி ஆடுகளுடன் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் செம்மறி ஆடுகளுக்கு முகக்கவசம் அணிந்து வந்து முற்றுகையிட்டனர். அவர்கள், தமிழகத்தில் கால்நடை சந்தைகள் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
இதில், பொதுச்செயலாளர் பி.பரமேஸ்வரன், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்ட துணை தலைவரும், மாநில இணைய தள பொறுப்பாளருமான ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் வழங்கிய மனுவில், கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தாங்களது விளைநிலத்தில் உற்பத்தி செய்த பருத்தி, மக்காச்சோளம், வத்தல், பருப்பு வகைகளை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இதில், கால்நடை சந்தைகள் கடந்த 4 மாதங்களாக இயங்காததால் விவசாயத்தின் உப தொழிலான ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கும் விவசாயிகள் சோர்ந்து போய் உள்ளனர்.
இதனால் முற்றிலும் தேக்க நிலை ஏற்பட்டு, கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் உரிய பருவத்தில் விற்பனை செய்ய முடியாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
தற்போது தென் மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக செம்மறி ஆட்டு கிடா குட்டிகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளிடம் தேக்க நிலையில் இருந்து வருகிறது.
இதில் நாளை பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ள நிலையில் சந்தைகள் இயங்காமல் செம்மறி ஆடுகள் விற்பனையாகவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக சந்தைகளை திறந்து ஆடு, மாடு, கோழி விற்பனைக்கு வழிவகுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ரெங்கநாயகலு கூறும்போது, பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி கொடுக்க செம்மறி ஆடுகளை இஸ்லாமியர்கள் வாங்குவார்கள்.
மேலும், கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செம்மறி ஆடுகளை வாங்கி செல்வார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் வியாபாரிகள் வரவில்லை.
அதேபோல், உள்ளூரிலும் சந்தைகள் இயங்காததால் செம்மறி ஆடுகளை விற்பனை செய்ய முடியவில்லை. இ-பாஸ் பெற வேண்டிய நிலை நீடிப்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கவில்லை.
பக்ரீத் பண்டிகையையொட்டி தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செம்மறி கிடா குட்டிகள் ஏற்றுமதி செய்யப்படும். இந்தாண்டு சந்தைகள் இயங்காததால் வியாபாரிகள் கொள்முதல் செய்யாமல் ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு ஜோடி செம்மறி ஆடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போகும். இந்தாண்டு செம்மறி கிடா குட்டிகளை வாங்க ஆளில்லை.
அப்படியே வரும் ஓரிரு வியாபாரிகளும் நன்றாக வளர்ந்த செம்மறி கிடா குட்டிகளை ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக விலை கேட்கின்றனர், என்றார் அவர்.