உயிர் இழந்த மீனவர்கள் ஆண்டனி, ஷாஜி 
தமிழகம்

உயிரைப் பறிக்கும் குழித்துறை தடுப்பணை: தடுத்து நிறுத்தக் கோரி மீனவர்கள் நாளை கருப்புக் கொடி ஏற்றம்  

என்.சுவாமிநாதன்

சீறிவரும் அலைகளைத் தடுத்து நிறுத்தி மீன்பிடிப்புக்கு ஏற்ற சூழலை உருவாக்கவே மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அந்த துறைமுகத்திற்குள்ளேயே அலைகள் சீறிவர, புதிதாகக் கட்டப்பட்டு வரும் தடுப்பணைதான் காரணம் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் குழித்துறை மீனவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில் கடல்நீர், ஆற்றில் கலக்காத வண்ணம் ஐந்து மீட்டர் உயரத்துக்குத் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பணையைக் கட்டுவதால் கடல் நீர் ஆர்ப்பரித்து எழுவதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தடுப்பணையை நீக்கிக் கட்டினால் கடல் நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும் என்று ஒருசாரரும், தடுப்பணையை நீக்கிக் கட்டவில்லை என்றால் கடல் அலைகளோடு சேர்ந்து வரும் மணல் திரும்பி கடலுக்குச் செல்ல வாய்ப்பில்லாமல் மணல் மேடு உருவாகிவிடும் என்று இன்னொரு சாரரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் துறைமுகத்தில் மணல் திட்டு ஏற்பட்டதால், படகு கவிழ்ந்து முள்ளூர்துறையைச் சார்ந்த ஆண்டனி, ஷாஜி என்ற இரு மீனவர்கள் அண்மையில் இறந்து போனார்கள். இதனைத் தொடர்ந்து துறைமுகத்தின் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக நீரோடித்துறை, மார்த்தாண்டம்துறை, இரையுமன்துறை, முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம், மிடாலம், மேல்மிடாலம், ஹெலன்நகர் ஆகிய கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் விசைப் படகுகளிலும், நாட்டுப் படகுகளிலும், கட்டு மரங்களிலும் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாளை இந்த கடற்கரை கிராமங்களில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடிவு செய்துள்ளனர் மீனவர்கள்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசிய வழக்கறிஞர் திருத்தமிழ்தேவனார், ''குளச்சல், முட்டம், சின்ன முட்டம், தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காசிமேடு ஆகிய இடங்களில் துறைமுகங்கள் கடலில் கட்டப்பட்டுள்ளன. தேங்காய்பட்டிணம் துறைமுகம் தாமிரபரணி ஆறும், கடலும் சந்திக்கும் பொழிமுகம் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. சற்றும் தொலைநோக்குப் பார்வையோடு செயல்படாத காரணத்தால் பல சிக்கல்களை இத்துறைமுகம் சந்தித்து வருகின்றது.

கடல் அலையின் வேகத்தைத் தடுப்பதற்காகத்தான் துறைமுகம் கட்டப்படுகிறது. அதன்மூலம் கடலின் சீற்றத்துக்கு இரையாகாமல் படகுகளைக் கடலுக்குள் கொண்டு செல்ல முடியும். துறைமுகம் கட்டப்பட்ட நிலையில் அல்லது கடல் அலையின் வேகம் தடுக்கப்பட்ட நிலையில் கடலானது நிலத்தை நோக்கி நகர வாய்ப்பில்லை. துறைமுகம் கட்டப்பட்ட நிலையில் தடுப்பணை என்கிற கோரிக்கையே நீர்த்துப் போயிருக்க வேண்டும்.

இந்தத் துறைமுகத்தை நம்பி எழுநூறுக்கு மேற்பட்ட விசைப் படகுகளும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வல்லங்களும் கட்டுமரங்களும் உள்ளன. பல மக்களுடைய வாழ்வாதாரங்கள் இத்துறைமுகத்தை நம்பியே இருக்கின்றன. மீனவர்களிடம் எந்தவிதக் கலந்தாய்வும் இல்லாமல் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது ஏற்புடையதல்ல. கடல் நீர் புகாமல் இருப்பதற்கு ஏற்கெனவே ஏவிஎம் கால்வாய் இருக்கும் நிலையில் தடுப்பணை தேவையில்லை என்கிற நிலைதான் இதுவரை இருந்து வந்தது.

கடல் அலை துறைமுகத்தைத் தாண்டி, வேகமாக தாமிரபரணி ஆற்றை நோக்கி நகருகிறது என்றால் துறைமுகம் சரியாகத் திட்டமிடப்படவில்லை என்று அர்த்தம். இந்தத் தடுப்பணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை என்றும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையை மீறிக் கட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் தடுப்பணையை கணபதியான்கடவு என்னும் மற்றொரு பகுதிக்குக் கொண்டுபோயிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது'' என்றார்.

SCROLL FOR NEXT