பயணிகளின் தேவை அதிகரிப்பால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரூவுக்கு 180 இருக்கைகள் கொண்ட பெரிய ரக விமானங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
கரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் விமான நிலையங்களில் குறைந்தளவு விமானங்களே இயக்கப்படுகின்றன.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவுக்கும் கூடுதல் பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால், முன்பைவிட குறைந்தளவு விமானங்களே இயக்கப்படுகின்றன.
கரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை மதுரை விமான நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன.
ஆனால், தற்போது சென்னைக்கு தினமும் 3 விமானங்களும், பெங்களூருவுக்கு ஒரு விமானமும், ஐதராபாத்திற்கு ஒரு விமானமும், டெல்லிக்கு வாரத்திற்கு 3 விமானங்களும் மட்டுமே இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு இயக்கப்படவில்லை.
சில நேரங்களி்ல வெளிநாடுகளில் தவிக்கும் உள்நாட்டினரை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகின்றன.
இதில், சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் செல்லும் விமானங்களில் 90% இருக்கைகள் நிரம்பச் செல்கின்றன. டெல்லி செல்லும் விமானத்தில் 50 சதவீதம் மட்டுமே இருக்கைகள் நிரம்புகின்றன.
சென்னை மற்றும் பெங்களூருவுக்கு பயணிகள் அதிகளவு வருவதால் இண்டிகோ நிறுவனம், வரும் ஆகஸ்ட் முதல் 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இயக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது ஒரு நாளைக்கு 700 முதல் 800 பயணிகள் மதுரை விமானம்நிலையம் வழியாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் சென்று வருகின்றனர்.
இதில் உள்நாட்டுப் பயணிகளே அதிகம். சில நாட்களில் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் கரோனாவால் தவிக்கும் பயணிகள் அழைத்து வரும்போது அவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
இதுபோல் தொடர்ந்து பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதால் கரோனா முடிவுக்கு வரும்போது இந்தியாவின் பிற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இதுபோல் பெரிய ரக விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.