எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் சேலம் எம்.பி. பார்த்திபனிடம் மனு அளித்தனர். | படம்: எஸ். குரு பிரசாத். 
தமிழகம்

எட்டு வழிச்சாலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தல்; சேலம் எம்.பி.யிடம் மனு

வி.சீனிவாசன்

எட்டு வழிச்சாலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், சேலம் எம்.பி.யைச் சந்தித்து இன்று மனு அளித்தனர்.

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலையை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக எட்டு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான விவசாயிகள், சேலம் எம்.பி. பார்த்திபனை இன்று (ஜூலை 30) சந்தித்து மனு அளித்தனர். எட்டு வழிச்சாலை நிறைவேற்றுவதைத் தடுத்திட நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, "பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எட்டு எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் எம்.பி. பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்" என்றார்.

இதுகுறித்து, எம்.பி. பார்த்திபன் கூறும்போது, "விவவசாய நிலங்கள், நீர் ஆதாரங்கள், காடுகள், மலை உள்ளிட்ட இயற்கை வளங்கள் பாதிக்கக்கூடிய எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றிட மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும். இந்த எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT