ஊரகச் சாலைகள் மேம்பாட்டுக்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கையில், ''ஊரகச் சாலைகள் சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், வறுமையை ஒழிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனை கருத்திற் கொண்டு, தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் 2015-16 ஆம் ஆண்டு 4,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்பாட்டுக்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஊரகச் சாலைகள் மேம்பாட்டிற்காக நபார்டு திட்டத்தின் கீழ் 41 பாலங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் ஊரகச் சாலைகள் பராமரிப்பிற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .
ஊரகப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் சாலைகள், பாலங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் போன்ற பல்வேறு பணிகள் 375 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மேலும், மாநில உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள், பாலங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் .
ஆக மொத்தம், சாலைகள், பாலங்கள் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக, ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, நடப்பாண்டில் மொத்தம் 1475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்கள் கிராமங்களிலேயே பல்வேறு அரசு சேவைகளான பிறப்பு / இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதியம் மற்றும் பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு உதவிகள் ஆகியவற்றை விரைந்து பெறும் வகையில், மின்னணு சேவையை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதற்கென 2015-16ஆம் நிதி ஆண்டில் 3890 கிராம ஊராட்சிகளில் சேவை மையங்கள் 661 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.