புதுச்சேரியில் இன்று புதிதாக 122 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 30) கூறும்போது, "புதுச்சேரில் நேற்று 735 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 114 பேர், காரைக்காலில் 8 பேர் என மொத்தம் 122 (15.5 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 85 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 24 பேர் ஜிப்மரிலும், 5 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 8 பேர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரி அண்ணா சாலையைச் சேர்ந்த 51 வயது ஆண் நபர் கரோனா தொற்று ஏற்பட்டு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் ஏற்கெனவே உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,293 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 472 பேர், ஜிப்மரில் 351 பேர், கோவிட் கேர் சென்டரில் 219 பேர், காரைக்காலில் 44 பேர், ஏனாமில் 47 பேர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் ஒருவர் என 1,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், புதுச்சேரியில் 146 பேர், ஏனாமில் 11 பேர் என 157 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 27 பேர், ஜிப்மரில் 6 பேர், கோவிட் கேர் சென்டரில் 51 பேர் என மொத்தம் 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,953 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 37 ஆயிரத்து 999 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 33 ஆயிரத்து 991 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 456 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.