சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் கோட்டாறில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வாலிபருடன் மாயமான 15 வயது பள்ளி மாணவியை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது மாணவி போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் நாகர்கோவில் தொகுதி முன்னாள் ஆதிமுக எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாயார் உட்பட 5 பேர் மீது நாகர்கோவில் அ¬ன்தது மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பணத்திற்காக சிறுமியின் தாயாரே அவரை தவறான பாதைக்கு தள்ளியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தினால் இதில் தொடர்புடையோர் மேலும் பலர் சிக்குவார்கள் என்பதால் போலீஸார் வழக்கை தீவிரப்படுத்தினர்.
4 பேரை போலீஸார் கைது செய்திருந்த நிலையில் தலைமறைவான நாஞ்சில் முருகேசனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் வைத்து நேற்று நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவில் அழைத்து வரப்பட்ட அவரை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாஞ்சில் முருகேசன் சோர்வடைந்த நிலையில் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தபோது குறைந்த ரத்த அழுத்தம், மற்றும் உடல் நலக்குறைவு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.