புதிய கல்விக் கொள்கையை கரோனா பேரிடர் நேரத்தில் அவசர கதியில் மத்திய அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
எட்டாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, கல்லூரிகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக, புதிய கல்விக் கொள்கைக்கு திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூலை 30) தன் ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்களைச் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கரோனா பேரிடர் நேரத்தில் அவசரகதியில் மத்திய அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல.
இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, அவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையானதை மட்டும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.