தமிழகம்

பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும்; டெல்லியை பின் பற்றுங்கள்:  ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பெட்ரோல் டீசலுக்கான விலை உயர்வை தடுக்க டெல்லி மாநிலத்தை பின் பற்றி வாட் வரியை தமிழக அரசும் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் எரிபொருளுக்கான தனி அமைச்சகம் இருந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைப்பொறுத்து விலையை அரசு நிர்ணயித்து வந்தது. பின்னர் இது எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றி தற்போது தினமும் என மாற்றப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவராமல் வாட் வரி மூலம் மாநில அரசுகள் வரி விதிப்பதால் மறுபுறம் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்வு அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டீசல் மீதான வாட் வரியை பாதியாக குறைத்துள்ளார். இதனால் டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதை மேற்கோள் காட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்திலும் தமிழக அரசு வாட்வரியை பாதியாக குறைக்க கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு! தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும். மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும்; வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசின் வாட் வரி சுமார் 16.5 ரூபாய் வரை உள்ளது.

SCROLL FOR NEXT