தமிழகம்

46 மரங்களுக்கு மறுவாழ்வு: விருதுநகரில் மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக வேரோடு அப்புறப்படுத்தி வேறிடத்தில் நடப்பட்ட மரங்கள் துளிர்த்தன

இ.மணிகண்டன்

விருதுநகரில் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 46 மரங்கள் வேரோடு பிடுங்கி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடப்பட்ட மரங்கள் அனைத்தும் துளிர்த்து மறுவாழ்வு பெற்றுள்ளன.

விருதுநகர்- சாத்தூர் சாலையில் மாவட்ட விளையாட்டரங்கம் எதிரே வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இருந்த பகுதியில் 28 ஏக்கர் பரப்பளவில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை கடந்த மார்ச் 1-ம் தேதி முதல்வர் பழனிச்சாமி அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதையொட்டி, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்த பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ள இடங்களில் இருந்த சுமார் 10 முதல் 50 வயதுடைய 46 மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டது.

அதையடுத்து, பொதுப்பணித்துறையினர் மூலம் கோவை பாரதியார் பல்கலைக்கழக திட்ட அலுவலரும் (மரங்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்) ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணப்பாளருமான கே.சையதுவுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.

சையதுவின் வழிகாட்டுதல்கள் படி விருதுநகர் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 46 மரங்களும் அளவீடு செய்யப்பட்டு கிளைகள் அகற்றப்பட்டன.

பின்னர், பொக்லைன், கிரேன் போன்ற இயந்திரங்கள் மூலம் வேரோடு பிடுங்கப்பட்ட வேம்பு, அரசமரம், புங்கை, வாகை உள்ளிட்ட 46 மரங்களும் வேறோடு தோண்டப்பட்டு 6 கி.மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் ஓரத்தில் வரிசையாக நடப்பட்டுள்ளன.

தற்போது நட்டுவைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் துளிர்விட்டு மீண்டும் வளரத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து கே.சையது கூறுகையில், மரங்களை வெட்டுவது பேரிழப்பு. மூலிகை மரங்கள் வெட்டப்படுவதால்தான் நாம் பல்வேறு கிரிமிகள் தாக்கும்போது எதிர்ப்பு சக்தி இல்லாமல் நோய்வாய்படுகிறோம்.

எத்தனை கோடி செலவு செய்தாலும் ஒரு இலையைக் கூட நம்மால் உடனே உருவாக்க முடியாது. அந்த வகையில் மரங்களை வெட்டுவதால் உயிர் பண்மை பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசும், நாம் சுவாசிக்க நல்ல காற்றும் கிடைக்காத நிலையும் உருவாகி விடும்.

ஆனால், கட்டுமானம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 50, 60 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த மரங்களை வெட்டி வளங்களை அழிப்பதை விட, அவற்றை மீட்டு மறு வாழ்வு அளிக்கலாம்.

இந்த முயற்சியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி கர்நாடகா, குஜராத் மாநிலங்களிலும் இப்பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

விருதுநகரில் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 46 மரங்கள் வேரோடு பிடுங்கி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நட்டோம். தற்போது அனைத்தும் துளிர்விடத் தொடங்கியுள்ளன" என்றார்.

SCROLL FOR NEXT