கோப்புப்படம் 
தமிழகம்

காலமுறை ஊதியம் வழங்கிடுக; கஷ்ட ஜீவனத்தில் காலம் தள்ளும் ஆயுஷ் மருத்துவர்கள்!

கரு.முத்து

கால நேரம் பார்க்காமல் அரசு மருத்துவர்களுக்கு நிகராகக் களப்பணி ஆற்றும் தங்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று ஆயுஷ் மருத்துவர்கள் (சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா நேச்சுரோபதி ஆகிய முறைகளில் மருத்துவம் பார்ப்பவர்கள்) கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ‘தமிழக அரசு தேசிய ஊரக சுகாதாரத் திட்டம்’ மூலம் தமிழகம் முழுவதும் 375 ஆயுஷ் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பணி மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வேலை; தினமும் 1000 ரூபாய் ஊதியம் என அப்போது நிர்ணயம் செய்யப்பட்டது.

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இவர்களின் தேவை இன்னும் கூடுதலாகத் தேவைப்பட்டதால் கூடுதலாக 100 ஆயுஷ் மருத்துவர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஆறு நாட்களாக வேலை நாட்கள் அதிகரிப்பட்ட நிலையில் தின ஊதியத்தை 800 ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். இதுகுறித்து ஆயுஷ் மருத்துவர்கள் பலமுறை அரசுத் தரப்பை அணுகிப் பேசிய பிறகு மீண்டும் அது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் அளிக்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. உதவியாளர், மருந்தாளுநர், தூய்மைப் பணியாளர் என்று யாரும் இல்லாத நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திறப்பதிலிருந்து பெருக்குவது, மருத்துவம் பார்ப்பது, மருந்து வழங்குவது, பதிவேடுகளைப் பராமரிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் ஆயுஷ் மருத்துவர்களே செய்து வருகிறார்கள்.

டெங்கு, கரோனா உள்ளிட்ட பேரிடர்க் காலங்களில் இவர்களின் பங்கு மிகப் பெரியது. கிராமங்கள்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட நேரடியான களப் பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தற்போதைய கரோனா காலகட்டத்தில் இவர்களின் சேவை அரசுக்கும், மக்களுக்கும் மிகுந்த தேவையாக இருக்கிறது. இந்த நேரத்திலாவது தங்களைப் பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதுகுறித்து ஆயுஷ் மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.செல்லையா ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் எங்களுடன் நியமிக்கப்பட்ட அலோபதி மருத்துவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால், எங்களை இன்னும் நிரந்தரம் செய்யவில்லை. நிரந்தரப் பணியில் உள்ள ஆயுஷ் மருத்துவர்கள் பணியாற்றுவது போலவேதான் நாங்களும் பணிபுரிந்து வருகிறோம். ஆனால், அவர்களின் ஊதியத்துக்கும் எங்கள் ஊதியத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. கடைநிலை ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தை விட எங்களது ஊதியம் மிகவும் குறைவு.

சென்னை பெருவெள்ளம், தானே புயல், கஜா புயல், டெங்கு, சிக்குன் குனியா, கரோனா உள்ளிட்ட பேரிடர்க் காலங்களில் நாங்கள் காலநேரம் பார்க்காமல், மிகவும் சிறப்பாகப் பணியாற்றி சுகாதாரத் துறைக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால், எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க மறுக்கிறது. இதனால் எங்களில் பல மருத்துவர்கள் குறைந்த வருமானத்தில் குடும்பத்தைச் சமாளிக்க முடியாமல் பணியிலிருந்து விலகிவிட்டார்கள். சில மருத்துவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். சிலர் பணியில் இருக்கும் காலங்களில் விபத்து மற்றும் உடல்நலக் குறைவால் இறந்தும் விட்டார்கள்.

தற்போதைய நிலையில் 350-க்கும் குறைவான ஆயுஷ் மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். பெண் மருத்துவர்களே அதிகம் இருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு எங்கள் மீது கருணைகூர்ந்து எங்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கிட இந்த நேரத்திலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT