எழுத்தைவிட அன்றாடம் நாம் தரிசிக்கும் வாழ்க்கை மிகவும் கொடூரமானதாக இருக்கிறது. அதை முழுவதுமாக எழுத்தில் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசினார்.
கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் விஜயா வாசகர் வட்டம் சார்பில், தமுஎகச மாநிலத் தலைவரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நேற்று நடந்தது. பேராசிரியர் சு.துரை தலைமை வகித்தார். விஜயா பதிப்பகம் உரிமையாளர் மு.வேலாயுதம் வரவேற்றார் .
தமிழ்ச்செல்வனின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள், கட்டுரைகளை முன்வைத்து கவிஞர்கள் மதுக்கூர் ராமலிங்கம், தங்கம் மூர்த்தி, எழுத்தாளர் ஜாகீர் ராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
ஏற்புரையில் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: சிறந்த படைப்பாளி என்பவன் எங்கு எப்படியிருந்தாலும் அவனின் படைப்பு மனோநிலையிலிருந்தே செயல்படுவான். அவனின் ஒவ்வொரு செயல்களும் படைப்புகளை படைக்கும் நேர்த்தியும், ஒழுங்கும் கொண்டிருக்கும். புகழ் தேடல், மாற்றுத்தேடல்களால் படைப்பாளிகள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வது வேண்டுமானால் சாத்தியமே ஒழிய வேறு எதுவும் ஒரு படைப்பாளியை அழிக்க முடியாது.
என்னை வளர்த்தது சிறுகதை எழுத்துக்கள். என்னை இடதுசாரியாக மாற்றியது சிறுகதைகள். என்னை படைப்பாளியாக மாற்றியது, தெரு நாடகங்கள், அறிவொளி இயக்கம், மக்கள் சந்திப்புகள் என சகலத்திலும் மாதவய்யா, புதுமைப்பித்தன் என சிறுகதை எழுத்தாளர்களே நிறைந்திருந்திருக்கிறார்கள்.
சிறுகதைகள் வழியே மக்களிடம் செல்ல தொடக்கத்தில் முயற்சித்தேன். அதைவிட வீதி நாடகங்கள், மக்களை அடைவது எளிதாக இருந்தது. அமைப்பிலிருந்து வேலை செய்யும்போது நுட்பமான அனுபவ நிலை தேவைப்படுகிறது. மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்புகிற புறச்சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தற்போதைய கல்வியில் உள்ள உள்ளடக்கம் எதை கற்றுத்தருகிறது. அந்தக் கல்விக் கூடங்களிலிருந்து நம் குழந்தைகளையும், கல்வியையும் விடுதலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை எப்படி செய்யப் போகிறோம். தெரியவில்லை. சமூகத்தையும், கல்வியையும் வகுப்பறைகள் இணைக்க வேண்டும். அது நடக்கிறதா?
இங்கே ஆண்களின் காதல் உடமைகள் கொண்ட காதலாக இருக்கிறது. பெண்களின் காதல் தன்னிடம் உள்ள எல்லாமே ஒப்படைக்கிற காதலாக இருக்கிறது. ஆசிட் வீச்சில் இறந்த விநோதினியின் சாவுக்கு யார் காரணம்? நாம் எழுதும் எழுத்தை விட, வாழ்க்கை என்பது இப்படி மிகவும் கொடூரமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.