பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 31 பேருக்குக் கரோனா

க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் காவலர், கிராம நிர்வாக அலுவலர், மின் ஊழியர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர் உள்ளிட்ட 31 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் நேற்று 28 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று (ஜூலை 30) 31 ஆக அதிகரித்துள்ளது. கரூர் நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த 49 வயது காவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், மின்வாரிய ஊழியர், 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப உதவியாளர், கொசுவலை நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர் மேட்டுத்தெருவில் 37 வயது பெண் மற்றும் அவரின் 13, 10 வயது மகன்கள் , குப்புச்சிபாளையத்தில் 75 வயது முதியவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், வாங்கல் மற்றும் வெங்கமேட்டைச் சேர்ந்த தலா 3 பேர், ராம் நகரைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 29 பேருக்கும் மற்றும் திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்த 78 வயது முதியவர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த 27 வயது பெண் என மொத்தம் 31 பேருக்கு இன்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்ட 31 பேரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 103 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் என 113 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் புதிதாக தொற்று ஏற்பட்ட 31 பேர் என, தற்போது 144 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

SCROLL FOR NEXT