ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக மலைக் கிராம சாலைகளில் ஆங்காங்கே பாறைகள் சரிந்தும், மரங்கள் முறிந்தும் விழுந்தன.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை, விடிய விடிய பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 82.60 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பிற பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: காடையாம்பட்டி 62, தம்மம்பட்டி 60, ஆனைமலை 19, கரியகோவில் 17, சேலம் 5.10, வாழப்பாடி 14.00, ஓமலூர் 9.40, பெத்தநாயக்கன்பாளையம் 26, சங்ககிரி 6.40, மேட்டூர் 13.20, எடப்பாடி 9.20, கெங்கவல்லி 22, வீரகனூர் 12, ஏற்காடு 19 மிமீ மழை பதிவானது. தொடர் மழை காரணமாக, ஏற்காடு மலைப்பாதைகளில் ஆங்காங்கே சிறு அருவிகள் ஏற்பட்டு, நீர் கொட்டுகிறது.
இதனிடையே, ஏற்காடு வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டையனூர் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தன. மரங்களும் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை பொதுமக்கள் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சாலைகளில் மழைநீர் தேக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி நகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகளவில் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. மேலும், விவசாயிகள் நெல், ராகி, சிறுதானியங்கள் விதைப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாரூர் 7.4 மிமீ, அஞ்செட்டி 11.4, நெடுங்கல் 9.2, போச்சம்பள்ளி 7 மிமீ மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 25-ம் தேதி விநாடிக்கு 739 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 602 கனஅடியாக குறைந்தது. அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் வலது, இடதுபுறக் கால்வாய்கள் மற்றும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளள வான 52 அடியில் 30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 40.34 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் 480 கனஅடி தண்ணீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.