நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 61 நியாய விலைக் கடைகளில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை, குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே வாங்குவதை உறுதி செய்ய அவர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கும் நடைமுறையை அரசுஅறிவித்தது. முதல் கட்டமாக திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இம்முறை அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டையை ஸ்கேன் செய்யும் ‘பாயின்ட் ஆஃப் சேல்’ கருவிகளை நீக்கிவிட்டு, கைரேகையை பதியும் வசதியுடைய நவீன ‘பாயின்ட் ஆஃப் சேல்’ கருவிகள் வழங்கப்பட்டன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நவீன கருவியில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்தால், அதன் வாயிலாக ஆதார் எண் மூலம் அவர் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்தான் என்பது உறுதி செய்யப்படும். இம்முறை, முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 61 நியாய விலைக்கடைகளில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.