தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்படும் 5 சுங்கச்சாவடிகளில் 126 நாட்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூல் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு சூழலில் நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டண வசூல், கடந்த ஏப்ரல்19-ம் தேதி முதல் மீண்டும் வசூலிக்கப்பட்டன. இருப்பினும், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்படும் 5 சுங்கச்சாவடிகளில் உடனடியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது தமிழக அரசு என அறிவுறுத்தியது.
அதன்படி, 126 நாட்களாக கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன இதற்கிடையே, தமிழக அரசின் அனுமதி பெற்று, நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூல் தொடங்கியுள்ளது.
முதல்வரின் அறிவுறுத்தல்படி...
இதுதொடர்பாக தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழக முதல்வரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ்வரும் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், ஏகாட்டூர், சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளிலும் நீண்ட நாட்களாக கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதற்கிடையே, தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது மேற்கண்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்றனர்.