தமிழகம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகளுக்கு செல்போனில் தொல்லை: சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகளுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மகள் ருபையா ஷெரிப் (55). இவரது சகோதரி மெகபூபா முப்தியும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்துள்ளார். ருபையா ஷெரிப் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ருபையா ஷெரிப்பின் செல்போனுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன. அதில்,
பேசிய நபர்கள் அசிங்கமாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளனர். அவர், இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சட்டம் ஒழுங்கு போலீஸார், ருபையா ஷெரிப்புக்கு அழைப்பு விடுத்த 2 செல்போன் எண்கள் மற்றும் ஒரு தொலைபேசி (லேண்ட் லைன்) எண் குறித்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து, போலீஸார் கூறும்போது, “பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்கள் கருதி, ருபையா ஷெரிப் குடும்பத்தினர் சென்னைக்குவந்து குடியேறி உள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி ரோந்து போலீஸார் எப்போதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, செல்போனில் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது குறித்து வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரிக்கிறோம்” என்றனர்.

பிணைக் கைதியாக இருந்தவர்

முப்தி முகமது சயீத் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது மகள் ருபையா ஷெரிப்பை தீவிரவாதிகள் கடத்தி பிணைக் கைதியாக வைத்திருந்தனர். பின்னர் அந்த அமைப்பின் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து ருபையா ஷெரிப் விடுவிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகே, பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களுக்காக ருபையா ஷெரிப் சென்னையில் குடியேறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT