காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் காலபைரவர் சிலை சர்ச்சை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் வளர்பிறை அஷ்டமியை ஒட்டி அந்தச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் காலபைரவர் உற்சவர் சிலை இருக்கும். இந்தச் சிலைக்கு வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி என மாதத்தில் 2 முறை அபிஷேகம் நடக்கும். இதில் பக்தர்களும் பங்கேற்பர்.
ஊரடங்கு காரணமாக கோயில் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சிலை வேறு இடத்தில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் ஈசானிய மூலையில் இருந்த காலபைரவர் சிலையை காணவில்லை என பக்தர்கள் மத்தியில் தகவல் பரவியது. சிவ
காஞ்சி காவல் நிலையத்தில் சிலர் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இந்தச் சிலை எங்குள்ளது என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காவல்துறை விசாரணையில் இந்தச் சிலை பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்தது. சர்ச்சையை தவிர்க்க சிலை இருந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, ஏகாம்பரநாதர் கோயிலில் காலபைரவர் உற்சவர் சிலை ஏற்கெனவே இருந்தஇடத்தில் வைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் பூஜை செய்யப்பட்டது. கால பைரவருக்கு சிறப்பான அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர், இந்தப் படங்களை பக்தர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். காலபைரவர் மீண்டும் வந்தார் என்ற தலைப்புடன் இந்தப்படங்கள் வெளியிடப்பட்டு
உள்ளன.
ஏற்கெனவே சிலை விவகாரத்தில் ஏகாம்பரநாதர் கோயிலில் சர்ச்சைகள் உள்ள நிலையில் காலபைரவர் சிலை விவகாரத்தில் புதிய சர்ச்சை உருவாகி அது சுமுகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.காஞ்சிபுரம் ஏகாரம்பரநாதர் கோயிலில் காலபைரவர் சிலை ஏற்கெனவே இருந்த இடத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.