மத்திய கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, மதிப்பீட்டாளர்களைக் கொண்டு சோதனை தொடங்கியுள்ள நிலையில், இதன் காரணமாகவே கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் 47 சென்னை கிளைகள் உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் நகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், நகைக் கடன்கள் திடீரென நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதற்கு கூட்டுறவுத் துறை மறுப்பு தெரிவித்தது.
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அளித்த டெபாசிட் தொகையைதிரும்ப வழங்கவேண்டி உள்ளதால், இருக்கும் தொகைக்கேற்ப நகைக்கடன் வழங்கப்பட்டு வருவதாக முதல்வரும் தெரிவித்தார். ஆனால், கூட்டுறவு வங்கிகளில்பொதுமக்கள் கோரும் நகைக்கடன்கள் தாமதம் செய்யப்படுவதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதே இந்த தாமதத்துக்கு காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி கடந்த மார்ச் மாதம் அனுப்பியகடிதம் அடிப்படையில், அனைத்து நகர கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் போலி நகை அடமானம் வைத்து வழங்கப்படும் நகைக் கடன் தடுப்பு நடவடிக்கையாக, நகைக் கடன் 100 சதவீதஆய்வுக்காக, நிரந்தர நகை மதிப்பீட்டாளர்கள் பட்டியலை அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இதுபோல போலி நகைகள் மூலம் கடன் பெற்ற விவரம் தெரியவந்ததையடுத்தே அரசுஉத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக, சந்தேகம் எழுந்துள்ள கூட்டுறவு வங்கிகளின் நகைப் பெட்டகங்கள் முடக்கப்பட்டு, அதன் காரணமாகவே நகைக் கடன்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நகைக் கடைகளில் கிடைக்கும் 1 கிராம், 2 கிராம் முதல் 8 கிராம் வரை பல அடுக்கு தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் கடன் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, நகை அடமானம் பெறும் பலரும், தாங்கள் குறைந்தபணம் கொடுத்து அடமானம் பெற்றநகைகளை, கூட்டுறவு வங்கிகளில்மறு அடமானம் பெற்றிருப்பதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாகவும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் தற்காலிக நகை மதிப்பீட்டாளர்கள் நியமனமும், அவர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றுவதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர் சங்கத் தலைவர் த.கமலக்கண்ணன் கூறியது:
கூட்டுறவு வங்கிகளில் 20 சதவீதம் மட்டுமே நிரந்தர நகை மதிப்பீட்டாளர்கள். மற்ற அனைவரும் தற்காலிக மதிப்பீட்டாளர்கள். நிரந்தர மதிப்பீட்டாளரை 3 ஆண்டுக்குஒருமுறையும், தற்காலிக மதிப்பீட்டாளரை ஆண்டுதோறும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அவ்வாறுசெய்யப்படுவது இல்லை. இதுகுறித்து சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தற்காலிக மதிப்பீட்டாளர்கள் கமிஷன் அடிப்படையில் செயல்படுவதால் அவர்களுக்கு நகைகள் மீதான பொறுப்பு இல்லை. இதனால், பல இடங்களில் போலிநகைகள் மீது கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதவிர ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய நகைகள் மதிப்பீடும் நடைபெறுவது இல்லை. நகைக் கடன் அதிக அளவில் வழங்கப்படும் வங்கிக் கிளைகளில் நிரந்தர மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படும்.
இதுதவிர, நகையின் தரத்தை (‘பியூரிட்டி’) அறியும் ஸ்கேனர் கருவிகளை அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நிறுவ வேண்டும். அப்போது, எத்தனை அடுக்கு முலாம் பூசப்பட்டிருந்தாலும் கண் டறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேநேரம், நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் நகைகளை மதிப்பிடும் பணி வழக்கமான ஒன்றுதான் என்கின்றனர் கூட்டுறவுத் துறை அதிகாரிகள்.
இதற்கிடையே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் மாற்றப்பட்டதற்கு, அதிக செலவினங்களை ஏற்படுத்தும் லாக்கர்களை வாங்க அனுமதிக்காததே காரணம் என்றும் கூறப்படுகிறது. இதுபோல பல்வேறு சிக்கல்கள் நிறைந்த கூட்டுறவு வங்கிகள் விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள், வங்கி அலுவலர்கள் தரப்பில் எழுந்துள்ளது.