பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான சர்வே பணிகள் நிறைவு பெற்றநிலையில் விரைவில் வைகை அணையில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தற்போது இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆனால், கோடை காலத்தில் வாரத்திற்கு முறை கூட குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதனால், முல்லைப் பெரியாறு அணையின் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து 125 எம்.எல்.டி. குடிநீரை குழாய் மூலம் மதுரை மாநகராட்சிக்கு கொண்டு வருவதற்கு முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பண்ணைப்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, ஏற்கனவே வைகை அணையிலிருந்து வரும் பழைய குடிநீர் குழாயில் கொண்டு வராமல் புதிய குடிநீர் குழாய் மூலம் மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தால் ஒவ்வொரு வீடுகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் என என மாநகராட்சி கூறுகிறது.
இதற்காக பேக்கேஜ்-1, பேக்கேஜ்-2, பேக்கேஜ்-3 ஆகிய மூன்று டெண்டர்களும் விடப்பட்டு அதற்கு இந்த திட்டத்திற்கு கடனுதவி வழங்கும் ஏசியன் டெவெலப்மெண்ட் வங்கி அனுமதியும் வழங்கியுள்ளது.
பேக்கேஜ்-4, பேக்கேஜ்-5 ஆகியவை மட்டும் டெண்டர் விட வேண்டிய உள்ளது. கரோனா தொற்று நோயால் தற்போது இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்தின் மதிப்பீடு மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: திட்ட மதிப்பீடு உயர வாய்ப்பு இல்லை. டெண்டர் விடப்பட்ட மூன்று பேக்கேஜ் பணிகளுக்கான சர்வே பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த மூன்று பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஏசியன் டெவெலப்மெண்ட் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மாநகராட்சிக்குட்குட்பட்ட புறநகர் 28 வார்டுகளில் இந்த திட்டத்தில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகர்பகுதியில் உள்ள 25 வார்டுகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடக்கிறது. மீதமுள்ள 57 வார்டுகளில் குடிநீர் குழாய் அமைக்க டெண்டர்விடக்கூடிய பணிகள் அடுத்த பேக்கேஜ் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது. அதனால், திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. கரோனாவால் மெதுவாக நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.