மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா இலவச மின்சார உரிமைக்கு எதிராக உள்ளதாக விவசாய இயக்கங்கள் போராடி வருகின்றன. இந்நிலையில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் மட்டும் 4 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில் 2 லட்சம் விசைத்தறிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வரும் சோமனூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில் உள்ளன. இதில் 90 சதவீதம் விசைத்தறிகளை இயக்குபவர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்களே. பாவு, நூல் சைசிங் மில்களில் எடுத்து ஒரு மீட்டர் காடாவிற்கு இவ்வளவு கூலி என்ற அடிப்படையில் தங்கள் சொந்தத் தறியில் நெய்து கொடுப்பவர்கள் இவர்கள்.
இந்தத் தொழிலில் குடும்பத்துடன் ஈடுபடுவதோடு, கூலிக்கும் ஆள் வைத்தும் செய்கின்றனர். இந்த விசைத்தறியாளர்களுக்கும், இவர்களுக்குப் பாவு, நூல் விநியோகம் செய்து துணியாக நெய்து வாங்கும் சைசிங் மில் முதலாளிகளுக்கும் இடையே மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூலி நிர்ணயம் செய்யப்படுவது உண்டு. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாகக் கூலி உயர்வு செய்யப்படவில்லை. பலமுறை முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டங்கள் நடத்தியும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
தவிர, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவை இந்தத் தொழிலை வெகுவாகப் பாதித்துள்ளன. போதாக்குறைக்குக் கரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த சில மாதங்களாக இந்தத் தொழில் சீர்கெட்டுப் போனது. சில வாரங்களாகத்தான் மெல்ல மீண்டெழுந்து சில தறிகள் இயங்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் இந்தத் தொழிலுக்குக் கைகொடுக்கும் இலவச மின்சாரத்திற்கும் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முதல்வர், மின்துறை அமைச்சர், கைத்தறித்துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எனக் கோரிக்கை மனுக்களை கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அனுப்பி வருகிறது.
இதற்கு எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அடுத்தகட்டமாக வீடுகளிலும் தொழிற்கூடங்களிலும் கருப்புக் கொடி கட்டிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்த இவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான சோமனூர் பூபதி நம்மிடம் கூறியதாவது:
''கடந்த காலங்களில் விசைத்தறித் தொழில் நலிவடைந்தபோது தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து, விசைத்தறிக்குக் தனி கட்டணப் பட்டியலை (Tariff) ஏற்படுத்தி ஸ்லாப் சிஸ்டம் என மின் கட்டணச் சலுகையை அறிவித்தது. மேலும், இந்தத் தொழில் நடத்தவே முடியாத சூழல் ஏற்பட்டபோது 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியது. இத்தொழிலில் ஏற்பட்ட சுணக்கத்தைக் கண்டு 2016-ல் கூடுதலாக 250 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய மின்துறை அமைச்சர் சென்னையில் இலவச மின்சார கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது விவசாயம் மற்றும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என்று முதல்வர் வலியுறுத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது விசைத்தறியாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலங்களில் விவசாயம், வீட்டு இணைப்பு, விசைத்தறி ஆகிய மூன்றுக்கும் இலவசம் கொடுக்கப்பட வேண்டும் எனவும், மாநில அரசு கொடுக்கும் சலுகையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. மத்திய அரசும்கூட இலவசம் கூடாது என்று சொல்லவில்லை. அது மாநில அரசின் உரிமை என்று கூறியது.
ஆனால், இப்போது விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. தமிழக அரசும் இதுகுறித்துத் தெளிவான அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இருக்கிறது. கரோனா சூழலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசைத்தறித் தொழில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த நேரத்தில் 750 யூனிட் இலவச மின்சாரத்துக்குப் பங்கம் வந்தால் இந்தத் தொழிலே நடக்காது. எனவே, அரசு எங்கள் பரிதாப நிலையைப் பரிசீலிக்க வேண்டும்''.
இவ்வாறு சோமனூர் பூபதி கூறினார்.