எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், காந்தி: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை எம்எல்ஏக்கள் குணமடைந்து வீடு திரும்பினர்

ந. சரவணன்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற நிகழ்ச்சி மூலம் வேலூர் கஸ்பா, ஆர்.என்.பாளையம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு கரோனா நிவாரண உதவி வழங்கினார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, இன்று (ஜூலை 29) காலை எம்எல்ஏ கார்த்திகேயன் வீடு திரும்பினார்.

அதேபோல, ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தியும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 19-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, அவரும் குணமடைந்து ஜூலை 28-ம் தேதி வீடு திரும்பினார்.

SCROLL FOR NEXT