தமிழகம்

அந்தரத்தில் தொங்கிய மின் கம்பம்; முட்டுக் கொடுத்து சென்ற மின் ஊழியர்கள்: சிவகங்கை மக்கள் அதிருப்தி

இ.ஜெகநாதன்

சிவகங்கையில் அந்தரத்தில் தொங்கிய மின்கம்பத்திற்கு மின் ஊழியர்கள் முட்டுக் கொடுத்துச் சென்றதால் அப்பகுதி மக்களிடம் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிவகங்கையில் பெரும்பாலான இடங்களில் இரும்புக் கம்பியால் ஆன மின்கம்பங்கள் உள்ளன. அந்த மின்கம்பங்களை ஊன்றி 50 ஆண்டுகள் மேலானநிலையில், பல மின்கம்பங்கள் துருபிடித்து சேதமடைந்து விழும்நிலையில் உள்ளன.

இந்நிலையில் மேலரதவீதி, வஉசி தெரு சந்திப்பில் உள்ள ஒரு மின்கம்பம் அடிப்பகுதி சேதமடைந்து அந்தரத்தில் தொங்கியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அங்கு வந்த 2 மின் ஊழியர்கள், அந்தரத்தில் தொங்கிய மின்கம்பத்தை ஏற்கெனவே இருந்த இடத்தில் நிறுத்தி வைத்து, அசையாமல் இருக்க கம்பிகளால் முட்டுக் கொடுத்துச் சென்றனர்.

அந்த மின்கம்பம் விழும்நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். அலட்சியம் காட்டாமல் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ரா.சோனைமுத்து கூறியதாவது: சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதியது பொருத்தாமல், முட்டுக் கொடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காற்று வீசினால் மின் கம்பம் விழுந்துவிடும். உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும் கல்லூரி சாலையில் இருந்து கோர்ட்வாசல் இரும்பு கம்பியால் ஆன 20-க்கும் மேற்பட்ட சேதமடைந்துள்ளன. அவற்றையும் மாற்ற வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT